மிளகு
வேறு பெயர் - கறி, மிரியல்
தாவரவியற் பெயர் - Piper nigram (பைபர் நைகிறம்)
குடும்பம் - Piperaceae (பைபரேசியே)
ஆங்கிலப் பெயர் - Black Peper
“பத்து மிளகிருத்தால் பகை வீட்டிலும் முண்ணலாம்” என்று ஒரு பழமொழி. மிளகின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது. அதாவது, மிளகிற்கு உணவிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும் ஆற்றல் உள்ளதால் பகைவீட்டில் உணவுடன் நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் அதை நீக்கவல்லதாக மிளகு இருக்கிறது என்பது கருத்து. சில மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள்! வெளியே கடினமான குணமுள்ளவர்கள் போல காரமாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உள்ளமோ மிகவும் இளகிய வெள்ளையுள்ளமாக இருக்கும். அது போன்ற குணமுள்ள ஒரு மருத்துவமூலிகை தான் மிளகு. மிளகைச் சுவைக்கும் போது முதலில் கார்ப்பாக, காரமாக இருக்கிறதல்லவா? ஆனால், உடலில் செயற்படும் போது மிளகு இனிப்புச் சுவையுள்ளதாக, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதாக மாறிவிடுகிறது! அதனால்தான் சித்தமருத்துவத்தில் கடுமையான சில மருந்துகளாய் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பதற்காக மிளகுக் குடிநீர் கொடுப்பது வழக்கம். சில நச்சுப் பொருள்களின் வீரியத்தைத் தணிக்கவும் மிளகுக் குடிநீர் சிறந்த ஒன்றாகும்.
“பத்து மிளகிருத்தால் பகை வீட்டிலும் முண்ணலாம்” என்று ஒரு பழமொழி. மிளகின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது. அதாவது, மிளகிற்கு உணவிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும் ஆற்றல் உள்ளதால் பகைவீட்டில் உணவுடன் நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் அதை நீக்கவல்லதாக மிளகு இருக்கிறது என்பது கருத்து. சில மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள்! வெளியே கடினமான குணமுள்ளவர்கள் போல காரமாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உள்ளமோ மிகவும் இளகிய வெள்ளையுள்ளமாக இருக்கும். அது போன்ற குணமுள்ள ஒரு மருத்துவமூலிகை தான் மிளகு. மிளகைச் சுவைக்கும் போது முதலில் கார்ப்பாக, காரமாக இருக்கிறதல்லவா? ஆனால், உடலில் செயற்படும் போது மிளகு இனிப்புச் சுவையுள்ளதாக, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதாக மாறிவிடுகிறது! அதனால்தான் சித்தமருத்துவத்தில் கடுமையான சில மருந்துகளாய் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பதற்காக மிளகுக் குடிநீர் கொடுப்பது வழக்கம். சில நச்சுப் பொருள்களின் வீரியத்தைத் தணிக்கவும் மிளகுக் குடிநீர் சிறந்த ஒன்றாகும்.
மிளகின் அருமை பெருமைகளை எமது முன்னோர் மிகவும் ஆதிகாலந் தொட்டே அறிந்து வைத்துள்ளனர். கறி என்றும் மிரியல் என்றும் மிளகின் பெருமை சங்கத் தமிழ் நூல்களிலே பேசப்பட்டுள்ளது.
பண்டைத்தமிழகத்திலிருந்து மிளகு, பெருமளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மிளகாயின் அறிமுகத்துடன் மிளகின் பாவனை எம்மக்களிடையே மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. மிளகாய்க்கு நாக்கு அடிமையாகி வயிற்றுப்புண்ணால் அவஸ்தைப்படுவதைத்தவிர வேறு நன்மைகள் இல்லை. மிளகினால் எவ்வித கெடுதியும் ஏற்படுவதில்லை.
மிளகில் கருமிளகு, வெண்மிளகு என்ற பேதங்களுண்டு. ஆயினும், இவற்றின் மருத்துவ குணங்கள் பெரும்பாலும் ஒன்று போலவேயுள்ளது. மிளகு கொடிவர்க்கத்துக்குரியது. பிறமரங்களில் ஏறிப்படரும். இலைகள் தனியிலைகள். பளபளப்பானவை. அகன்று, முட்டைவடிவாக இருக்கும். வெற்றிலை போன்றது. காய்கள் பச்சைநிறம் விதை கருநிறம்.
சீதசுரம் பாண்டு சிலேத்மங் கிராணி குன்மம்
வாதம் அருசி பித்தம் மாமூலம் - ஓதுசந்தி
யாசமபஸ்மாரம் அடன் மேகம் காசமிவை
நாசங் கறி மிளகினால்
கோணுகின்ற பங்கவலி குய்யவுரோகம் வாத
சோணிதங் கழுமத்திற்குள் தோன்றுநோய் - காணரிய
காதுநோய் மாதர்குன்மங் காமாலை மந்தமென்aர்
ஏதுநோய் காயிருக்கில் ஈங்கு”
என்று மிளகிருக்க (நோய்ப்) பயமேன்? என்று அபயமளிக்கிறது. தமிழ் வைத்தியம். மிளகினால் குளிர் சுரம், குருதிச் சோகை, கோழை, கழிச்சல், குன்மம் (வயிற்றுப்புண்), வாயு, நாச்சுவையின்மை, பித்தம், மூலநோய், சந்நியாசம் (ஒருவித உளநோய்), காக்கைவலிப்பு (அயஸ்மாரம்), பிரமேகம், இருமல், பங்கவாதம், குய்யரோகம், சோணிதவாதம், தொண்டை நோய், காதுவலி, வலியுடனான மாதவிடாய், செரியாமை, காமாலை, போன்ற அனேக நோய்களுக்கு மிளகை மருந்தாக உபயோகிக்கலாம்.
தமிழ் மருத்து வத்திலே சுக்கு (வேர்க்கொம்பு), மிளகு, திப்பலி ஆகிய மூன்று மருத்துவமூலிகைகளைக் கொண்ட ஒரு மருத் துவ கூட்டணி உண்டு. இதற்குத் திரிகடுகு, என்று பெயர். உடம் பிலே ஏற்படக்கூடிய பெரும்பாலான நோய்களுக்கு அசீரணம் அதாவது செரியாமை முக்கியமான காரணமாக அமைகிறது. அந்தச் செரியாமையை நீக்கும் மருந்தாக இந்தத் திரிகடுகு பயன்படுகிறது. இதைச் சமஅளவில் எடுத்துக் குடிநீராகவோ அல்லது சூரணமாகவோ சாப்பிட்டால் அஜீரணம் நீங்கி அதனால் ஏற்படக்கூடிய நோய்களும் நீங்கும். பண்டைக் காலத்தில் இத்திரிகடுகு பிரசித்தி பெற்று விளங்கியதால் தமிழ் அறிஞர் ஒருவர் தனது நூலுக்கே ‘திரிகடுகம்’ என்று பெயர் வைத்துவிட்டார் என்றால் பாருங்களேன்!
மிளகை மருந்தாகப் பயன்படுத்துவதிலும் பார்க்க உணவாகப் பயன்படுத்தியும் நாம் நலம் பெறமுடியும்.
மிளகு சீரகப் பொடி
மிளகு - 1 பங்கு
நற்சீரகம் -2 பங்கு
உப்பு தேவையான அளவு
ஒரு தாச்சியில் (எண்ணெய்விடாமல்) மிளகு, சீரகம் இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து சற்று ஆறியதும் இடித்து அல்லது மிக்சியில் அரைத்துப் பொடி செய்து தேவையான உப்புத்தூளும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை உணவுடன் சேர்த்துக் கலந்து, நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். முக்கியமாகக் குழந்தைகள், வயதானவர்கள் இதனைச் சாப்பிட்டுவந்தால் அவர்களுக்கு அசீரணம், வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் என்பன ஏற்படமாட்டாது. பசியும் நன்கு உண்டாகும்.
மிளகு ரசம்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
புளி - கொட்டைப்பாக்களவு
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறுதுண்டு
உப்பு - தேவையான அளவு
உள்ளி - 3 பல்லு
கறிவேப்பிலை - 1நெட்டு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு, சீரகம், புளியைக் கரைத்து, வடித்து, தாச்சியிலிட்டுக் கொதிக்க வைக்கவும். உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளவும் நன்கு கொதித்ததும் மேற்படி பொடியையும், உள்ளிப்பல்லை இலேசாகத் தட்டியும் போட்டு, கறிவேப்பிலையையும் போட்டு இரண்டு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும். கடுகு தாளித்து சேர்க்கவும்.
மிளகு தூள்
மிளகு, சுக்கு, திப்பிலி, சீரகம், உப்பு இவை சம அளவில் எடுத்து இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாப்பாட்டின் இறுதியில் 1-2 தேக்கரண்டி அளவில் உணவுடன் சேர்த்தாவது, தயிர் அல்லது மோருடன் சேர்த்தாவது சாப்பிட்டுவர உணவு நன்கு செரிக்கும் வயிற்றுப் பொருமல், வாய்வு, வயிற்றுவலி என்பன நீங்கும்.
மிளகுத் தூளுக்கு தேன், சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வர மூலச்சூடி, மூலஎரிவு, மூலநோய் என்பன நீங்கும்.
மிளகு வடை
உளுத்தம் பருப்பு - 500 கிராம்
மிளகு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பை ஊறவைத்து வடித்து நீர்விடாமல் இரண்டொன்றாக மிக்சி அல்லது ஆட்டுக்கல்லில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது மிளகு, உப்பையும் சேர்த்தரைக்கவும், கெட்டியாக எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி, பருத்தித்துறை வடைபோல தட்டையாக தட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் இந்த வடை 4,5 நாட்களுக்கும் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியது. தனிய உளுந்துவடை சாப்பிட்டால் ஏற்படக்கூடிய மந்தகுணம் இதில் ஏற்படமாட்டாது. உணவுக்கு உணவாகவும், மருந்திற்கு மருந்தாகவும் இது பயன்படும்.
மிளகு சாதம்
பச்சரிசி அல்லது சம்பா அரிசியை நீர்விட்டு வேகவைத்து, அரிசி நன்கு வெந்ததும் நீரைவடித்து நீக்கி வெந்த சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் அதற்கு மிளகு, சீரகம் இரண்டையும் இலேசாக வறுத்து இடித் தெடுத்த தூள் தேக்கரண்டி அளவில் தூவவும். கடுகு, உளுந்து, கறி வேப்பிலை என்பவற்றை நெய்விட்டு தாளிதம் செய்து அதனையும், தேவையான அளவு உப்புத்தூளையும் மேற்படி சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாதத்தை அருந்தினால் ஏற்படக்கூடிய நன்மைகள்
“மிளகோதன மருந்த விம்முகின்ற வாத
மிளகும் பசியுமெழும்பும் - களகளெனக்
கூவும் வயிற்றின் குடலிரைச் சலுங்கபமுந்
தாது பித்த முந்தணியுஞ் சாற்று”
வயிற்றுப் பொருமல், குடலிரைச்சல், கபாதிக்கம், பித்த கேஸம், வாதக் கோளாறுகள் என்பன நீங்குவதுடன் பசியும் நன்கு ஏற்படும் இவ்வளவு நன்மை தரக் கூடிய மிளகுசாதத்தை வாரத்தில் ஒரு தடவையேனும் உணவில் சேர்த்துப் பாருங்களேன்!
மிளகு குழம்பு
மிளகு - 1 மேசைக்கரண்டி
பழப்புளி - கொட்டைப்பாக்களவு
பெருங்காயம் - சிறுதுண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகை இலேசாகவறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பழப்புளியைக் கரைத்து தாச்சியில் விட்டு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிவந்ததும் மிளகு தூளைப் போட்டு நன்கு கலக்கவும். மேலும் இரண்டு கொதி கொதித்ததும் இறக்கிக் கொள்ளவும். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை என்பவற்றை நல்லெண்ணெயில் தாளித்து சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் தேங்காய்ப்பாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் நலத்திற்கு என்றும் நன்மைதரக்கூடிய மிளகைவிடுத்து, உடல் நலத்திற்குத் தீங்கு பயக்கும் மிளகாயை இனி மேலும் பயன்படுத்த மாட்டீர்கள் தானே!
ஒவொருவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக