சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான ரெசிபி! இந்த இதழ் டாக்டர் விகடனில், சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான ரெசிபிக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இருந்து... முளைகட்டிய பாசிப்பயறு சூப்
தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு & அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி. செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
ஒவொருவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.